வியாழன், 23 செப்டம்பர், 2021

திரையிசைப் பாடல்கள் வழி இலக்கியமும் வாழ்வியல் கருத்துகளும்: இலக்கிய உலாவில் அழைத்துச் சென்ற தமிழ் விருப்பப்பாட மாணவர்கள்!

24 ஏப்ரல் 2021 அன்று தமிழ் மொழி விழாவில் முதல் முறையாக அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி நிகழ்ச்சி படைத்தது. 'திரையிசைப் பாடல்கள் வழி இலக்கியமும் வாழ்வியல் கருத்துகளும்' என்ற தலைப்பில் படைக்கப்பட்ட இந்நிகழ்ச்சி இலக்கியங்களின் சிறப்புகளைப் பற்றி அறியச் செய்ததுடன் அவற்றை அன்றாட வாழ்விலும் கண்டு உணரச் செய்தது.

இந்நிகழ்ச்சியின் முதல் அங்கமாகக் கதாகாலட்சேபம் விளங்கியது. இவ்வங்கத்தில் மிளிர்ந்த பாட்டும் படைப்பும் மாணவர்களின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக விளங்கின என்று சொன்னால் மிகையாகாது.

உணர்ச்சிகளும் கருத்துகளும் நகைச்சுவை நிரம்பிய வசனங்களின் வழி பார்வையாளர்களைக் கவர்ந்தன. கதாகாலட்சேபத்தை திவ்யஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி குருவாகவும், ருஃபைதா சையத் இபுறாஹீம் மற்றும் செல்வக்குமார் சத்தியா ஸ்ரீ சீடர்களாகவும் இருந்து வழிநடத்தினார்கள்.

நேர்த்தியான கதையின் வழி திரையிசைப் பாடல்களில் உள்ள இலக்கியத்தை அவர்கள் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கினார்கள். திரைப்படப் பாடல்களைப் பாடியதோடு, சில பாடல்களின் மெட்டுகளுக்குப் புது வரிகளைப் புனைந்து பாடியது ஒரு சிறப்பாகும். இதனால் கூறப்பட்ட கருத்துகள் மனதில் எளிதாகப் பதிந்தன.

'நாம் எப்படித் தேடத் தேட செல்வம் சேர்கிறதோ, அதைப் போலத்தான் தமிழறிவு: தேட வேண்டும்' என்ற கருத்தை முன்வைத்த மாணவர்கள், அன்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்தி செவிக்கும் மனதிற்கும் விருந்தளித்தனர்.

இரண்டாவது அங்கமாகச் சிற்றுரை இடம்பெற்றது. சிற்றுரை என்றால் என்ன? மாணவர்கள் தமிழ் மொழியின் முதன்மைக் கவிஞர்கள் மூவராக மாறி, அக்கவிஞர்களே உரையாற்றுவதாக அமைந்ததே சிற்றுரையாகும்.

சரண்யா முசிலா, வைஷ்ணவி ராமநாதன் மற்றும் லாவண்யா கணேசன் கிருத்திக்கேஷ் பாரதியாராக, வைரமுத்துவாக மற்றும் கண்ணதாசனாகச் சிற்றுரையாற்றினார்கள்.

முதலில் பாரதியாக முழங்கினார் சரண்யா. இன நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாரதி, மூட நம்பிக்கைகளைக் கொள்ளும் போக்கினைக் கண்டித்து அஞ்சாமையையும் முன்மொழிந்தார், இனிய சனிக்கிழமைக் காலை வேளையில்.

அவருடைய சிற்றுரையைத் தொடர்ந்து, பாரதியின் 'அச்சமில்லை' கவிதை நடனமாக உருமாறியது. அய்யாக்கண்ணு அபிராமி, நந்தினி சிவக்குமார், கிருஸ்மிதா ஷிவ்ராம், திவ்யஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி, சுவப்ரியா சிதம்பரம் மற்றும் ஸ்ருதிகா குமார் ஆகியோரின் வீரமும் மிடுக்கும் மேடையையும் பார்வையாளர் மனங்களையும் அதிர வைத்தன.

அடுத்ததாக இளைய கண்ணதாசன், கிருத்திக்கேஷ் சிற்றுரை ஆற்றினார். நீதி இலக்கியம் முதல் சித்தர் பாடல்கள், இதிகாசங்கள் வரையிலான கூற்றுகளை மேற்கோள்காட்டி அவர் உரையாற்றினார். வலிமையற்ற நிலையில் உள்ள ஒருவர் வலிமையான இடத்தில் இருக்கும்போது வலிமையான ஒருவரை ஏளனப்படுத்தக் கூடும் என்பதை அனைவரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு வாழ்க்கையின் நிலையாமை, உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் விதியை மாற்றி அமைத்தல் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

இளைய கண்ணதாசனின் இனிய உரைக்கு ஏற்றற் போல, 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்ற திரையிசைப் பாடலை இனிமையாக மோனிஷாசக்தி சண்முகசுந்தரம், ரெத்தினம் ரெபேக்கா, அடைக்கப்பன் வள்ளியம்மை மற்றும் ஸஹானா ஞானானந்தம் ஆகியோர் பாடினார்கள்.

சிற்றுரையில் வைரமுத்துவின் இலக்கியச் செழுமை மிகுந்த உரை இறுதியாக இடம்பெற்றது. சங்க இலக்கியத்திலிருந்தும் பக்தி இலக்கியத்திலிருந்தும் மேற்கோள்கள் காட்டிய வைஷ்ணவி, வைரமுத்துவுக்கு உரிய பாணியில் இயற்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தினார்.

இதை அடுத்து, வைரமுத்துவின் 'நல்லை அல்லை' திரையிசைப்பாடல் அய்யாக்கண்ணு அபிராமி மற்றும் ஸ்ருதிகா குமாரின் அழகிய நடனத்தின் வழி உயிர்பெற்றது. நடனமணிகளின் விழிகளும் அசைவுகளும்கூட பாடலைப் பாடுவது போல் தோன்றி, பார்வையாளர்களின் மனதைக் கொள்ளை கொண்டன.

இறுதியாக, திரைப்படப் பாடல்கள் சிலவற்றின் மெட்டுகளுக்குப் புது வரிகளைக் கொண்டு பாடி வரவேற்றது 'வருத்தப்படாத வில்லுப்பாட்டுச் சங்கம்'. இச்சங்கத்தை நந்தினி சிவக்குமார், கிருஸ்மிதா ஷிவ்ராம், அடைக்கப்பன் வள்ளியம்மை, சு. ஷண்மதி மற்றும் ஸஹானா ஞானானந்தம் வழிநடத்தினார்கள்.

திரையிசைப் பாடல்களில் உள்ள இலக்கியமும் அவை உணர்த்தும் வாழ்வியல் கருத்துகளும் நேர்த்தியாக விளக்கப்பட்டன. விளக்கங்களைத் தொடர்ந்து, அல்லது அவற்றிற்கு இடையில் திரையிசைப் பாடல்கள் வில்லின் இன்னிசையுடன் பாடப்பட்டது பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மனிதன் பண்பட்டுத் திகழத் தன்னம்பிக்கை, பண்புகள் மற்றும் அடையாளம் இன்றியமையாதவை; தமிழர்களின் அடையாளமாக விளங்கும் தமிழ் மொழி, வேர்களைப் போல ஆழ்ந்து இருப்பது முக்கியம் என்று சுவைப்பட வில்லுப்பாட்டால் மாணவர்கள் எடுத்துரைத்தார்கள்.

கிட்டத்தட்ட 160 பார்வையாளர்களைக் கொண்டு இந்நிகழ்ச்சி மெய்நிகர் அரங்கில் வெற்றிகரமாக நடந்தேறியது. மாணவர்களை இரண்டே மாதங்களில் இத்தகையப் பெரும் சாதனையை நிகழ்த்தும்படி தயார் செய்தார்கள் நிகழ்ச்சியின் பொறுப்பாசிரியர்கள் திருமதி பா. கமலவாணி மற்றும் திரு. வீரமுத்து கணேசன் அவர்கள்

திரையிசைப் பாடல்கள் வழி இலக்கியமும் வாழ்வியல் கருத்துகளும் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்த காரணத்தைக் கேட்டபோது, பெரும்பாலான பாடல்களில் இருக்கும் ஆழ்ந்த கருத்துகளும் நம்மோடு காலங்காலமாக இருக்கக்கூடிய இலக்கியமும் பாடல்களில் பிரதிபளிக்கப்பட்டிருப்பது மாணவர்களைச் சேரும்போது அவர்கள் அடுத்த முறை ஒரு பாடலைக் கேட்கும்போது இன்னும் கவனமாகக் கேட்பதோடு அதைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள முனைவார்கள் என்ற எண்ணத்தில் தலைப்பைத் தேர்ந்தெடுத்ததாகத் திருமதி வாணி தெரிவித்தார்.

தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் இளையர்களிடத்தில் அவர்கள் விரும்புகிற வடிவத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக இருந்ததாகத் திரு. கணேசன் தெரிவித்தார். இரண்டு தொடக்கக் கல்லூரிகள் மட்டுமே தமிழ் மொழி விருப்பப்பாடத்தை வழங்கும் நிலையில் இலக்கியத்தின் மீதும் தாய்மொழிமீதும்  மாணவர்களுக்குக் கூடுதல் சிந்தனையையும், தன்னம்பிக்கையையும் ஆர்வத்தையும் உண்டாக்க இந்நிகழ்ச்சி படைக்கப்பட்டதாக அவர் எடுத்துரைத்தார்.

இளையர்கள் திரையிசைப் பாடல்களை வெறுமனே கேட்டுச் செல்லாமல் அவற்றில் இடம்பெறும் இலக்கியங்களையும் வாழ்வியல் கருத்துகளையும் உள்வாங்கும் வழிகளை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தவும் விழைந்தது.

மேலும், பழைய திரையிசைப் பாடல்களை மாணவர்கள் அவ்வளவாகக் கேட்காத நிலையை மாற்றும் வகையில் அவற்றை அவர்களுக்கு அறிமுகம் செய்து அவற்றில் உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்நிகழ்ச்சி படைக்கப்பட்டதாக திருமதி வாணி தெரிவித்தார்.

ஒரு நிகழ்ச்சியின் நோக்கம் நிறைவேற வேண்டுமெனில் அது கூறும் கருத்துகள் பார்வையாளர்களுக்குப் புரிய வேண்டும். அவர்களின் புரிதலை மேம்படுத்தும் வகையில் சலிப்புத்தட்டாதபடி அங்கங்கள் அமைக்கப்பட்டதாக திரு. கணேசன் எடுத்துரைத்தார். இலக்கியம் பயிலாத, தமிழ் மொழி 'பி' பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர் ஒருவர் இந்நிகழ்ச்சியைக் கண்டுவிட்டு, மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளைக் காண்பதில் ஆர்வம் தெரிவித்ததாகப் பகிர்ந்த திரு. கணேசன், இது இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு சான்று என்றும் கூறுகிறார்.

படைப்பை உருவாக்கிய மாணவர்கள், அது முடிந்துவிட்டது என்று விட்டுவிடாமல் வாழ்நாள் முழுதும் அவர்கள் முன்மொழிந்த கருத்துகளைப் பின்பற்ற வேண்டும் என்று திரு. கணேசன் கேட்டுக்கொண்டார்.

"இணைந்து செயல்படுவது, பல விஷயங்களைத் தெரிந்து கொள்வது என்ற நிலைகளில் அவர்கள் நிறைய கற்றுக்கொண்டார்கள். ஆனால், இன்னும் எவ்வளவோ விஷயங்கள் தமிழ் சார்ந்து இருக்கின்றன. அதை அவர்கள் தேடிக் கற்றுக் கொள்ளவேண்டும், தெரிந்து கொள்ளவேண்டும்," என்று திருமதி வாணி நிகழ்ச்சியைப் படைத்த மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

படைப்பை உருவாக்கிய தமிழ் மொழி விருப்பப்பாட மாணவர்களைப் போல தங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிபடுத்திக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நிகழ்ச்சியைக் கண்டு இரசித்த மாணவர்களுக்குத் திரு கணேசன் அறிவுறுத்துகிறார்.

"தமிழ் மொழி, இலக்கியம் என்பதை மாணவர்கள் பலர் கசப்பானது என்று கருதுகிறார்கள். இலக்கியம் கசப்பானது அல்ல, இனிப்பானது. திரையிசைப் பாடல்களில் இலக்கியம் என்பது போல் சிறிதாகத் தொடங்கி, மேன்மேலும் இலக்கியம் கற்கலாம்" என்றும் அவர்  கூறுகிறார்.

திரையிசைப் பாடல்களை நாம் எளிதாகக் கடந்துவிடும் போக்கு உள்ளது. அவற்றை இலக்கியக் கண்ணாடி வில்லைகள் வழி நோக்கி நாமும் நம் இலக்கியப் பயணத்தைத் தொடர்வோம்! இலக்கியம் என்பது வாழ்க்கையில் உள்ள வெற்றிடத்தை நிரப்பும் தன்மை உடையது. அதைப் பெறுவதன் வழி, சிறந்த மனிதர்களாகும் வழிகளை நாம் அறிந்து முன்னேறுவோம், சமுதாயத்தையும் முன்னேற்றுவோம்.


திரையிசைப் பாடல்கள் வழி இலக்கியமும் வாழ்வியல் கருத்துகளும்: இலக்கிய உலாவில் அழைத்துச் சென்ற தமிழ் விருப்பப்பாட மாணவர்கள்!

24 ஏப்ரல் 2021 அன்று தமிழ் மொழி விழாவில் முதல் முறையாக அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி நிகழ்ச்சி படைத்தது . ' திரையிசை...